படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி நான்கு வயது சிறுமி பெற்றோர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிம்பம் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் உத்தம் மேடி-அஞ்சனா மகடா தம்பதியினர். இவர்கள் தங்களது இரண்டாவது மகளான 4 வயது சிறுமி நன்றாக படிக்கவில்லை எனக்கூறி கைகளைக் கட்டி அடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்கையில் சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. உடனே சிறுமியின் உடலை சுமார் 40 கிலோமீட்டர் கொண்டு சென்ற பெற்றோர்கள் அவரது உடலை ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு அக்கம் பக்கத்தினர் சிறுமி குறித்து கேட்டபோது உத்தம் மேடியும், அஞ்சனா மகடாவும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு புகார் சென்ற நிலையில், சிறுமியை பெற்றோர்கள் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.