
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் மண்டபம் கேம்ப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சாலை வழியாகப் பயணித்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். இன்று ராம நவமி என்பதால் அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பேருந்து நிலையம் அருகே ரயில்வே துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதில் 8,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான பல்வேறு நெடுஞ்சாலை துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு முடிவடைந்த பணிகளை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க இருக்கிறார்.