
நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும், 12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசு, நிறைவேற்றியுள்ள இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முஸ்லிம்களை அடுத்து ஆர்.எஸ்.எஸ்ஸின் அடுத்த குறி கிறிஸ்துவர்கள் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா தற்போது முஸ்லிம் மக்களை தாக்கியது. எதிர்காலத்தில் மற்ற சமூகங்கள் மீது குறிவைப்பதற்கு முன்னுதாரணமாக தான் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று நான் கூறியிருந்தேன்.
இப்போது, ஆர்.எஸ்.எஸ் தனது கவனத்தை கிறிஸ்துவர்கள் மீது திருப்ப அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து நம் மக்களைப் பாதுகாக்கும் ஒரே கேடயம், நமது அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே. அதைப் பாதுகாப்பது நமது கடமை’ என்று பதிவிட்டு, தனியார் செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையை இணைத்து பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள கத்தோலிக்க நிறுவனங்கள் 7 கோடி ஹெக்டேர் நிலத்தை வைத்திருப்பதாகவும், அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளர்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.