![Embassy warns ... Will Modi talk to Putin?](http://image.nakkheeran.in/cdn/farfuture/3r6s4eiLZ3n9kVOI65DjKH3wTgxR_CCBKLz8m6-oEzs/1645716060/sites/default/files/inline-images/428ab363-ba1b-46c0-b75e-779c62d02852_w996_r1.7783711615487316_fpx53_fpy68_0.jpg)
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. உக்ரைனில் 70 க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்த நிலையில் 11 விமான தளங்களையும் அழித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல், சைரன் ஒலித்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அதிகாரிகள் கொண்ட குழுவை இந்திய வெளியுறவுத்துறை நியமித்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் நகரில் இந்திய தூதரகம் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் மட்டுமல்லாது அதன் எல்லை நாடுகளான ஹங்கேரி, போலந்து, ருமேனியா மூலம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் உடன் இன்று இரவு பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.