மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போரட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சில விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இருப்பினும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியின் திக்ரி எல்லையில் விவசாயிகள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டத்தில் இறங்கினர். அப்போராட்டம் இன்று (29.01.2021) இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் காசிப்பூர் எல்லையில், விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆய்வு செய்தார். மேலும் சிங்கு எல்லையில் சத்யேந்தர் ஜெயின் ஆய்வு செய்தார். அப்போது அவர், பாஜக உத்தரவால் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், "முதல் அமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உத்தரவின்படி, டெல்லி அரசு, எல்லையில் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் லாரிகளை அனுப்பியுள்ளது. ஆனால் பாஜகவின் உத்தரவின் பேரில், விவசாயிகளுக்கு தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட காவல்துறை அனுமதிக்கவில்லை. இது பாஜகவின் மோசமான அரசியல் மற்றும் மனித உரிமை மீறலாகும்" எனக் கூறியுள்ளார்.