
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் சந்தகட்டே பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவரது மனைவி ஹசீனா (46). இந்த தம்பதியருக்கு முகமது அசாத் (26), அசீம் (14) என்ற இரண்டு மகன்களும், அப்னான் (23), அய்னாஸ் (21) என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். நூர் முகமது கடந்த 30 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்தார். முகமது அசாத்தும், அப்னான்னும் பெங்களூரில் தனி அறை எடுத்து அதில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியின் இரண்டாவது மகளான அய்னாஸ் விமானப் பணி பெண் வேலைக்கு முயற்சித்து வருகிறார். கடைசி மகனான அசீம் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (12-11-23) தீபாவளி பண்டிகையொட்டி அப்னான் மட்டும் பெங்களூரில் இருந்து தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அந்த வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அப்னானை தான் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்ட ஹசீனாவும், அய்னாஸும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பார்த்தனர். அங்கு வந்த அவர்களையும், அந்த கொலையாளி கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அசீம் வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தான். அப்போது அந்த நபர், சிறுவன் அசீமையும் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.
4 பேரையும் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த அந்த மர்ம நபர், ஹசீனாவின் மாமியாரையும் மிரட்டி கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்தனர். அவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், ஹசீனாவின் மாமியாரை அருகில் இருக்கிற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.