Skip to main content

கேரளா வெள்ளம் 37 பேர் உயிரிழப்பு ...இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...

Published on 12/08/2018 | Edited on 12/08/2018

 

flood

 

 

 

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். அதில் பலர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மழை தொடர்ந்துவருவதால், கேரள மாநிலத்தில் உள்ள 22 அணைகளும் திறந்துவைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், மேலும் பல பகுதிகளை சூழந்துகொண்டுள்ளன. 

 

இந்நிலையில், வெள்ளம் பாதித்த இடுக்கி, ஆலப்புலா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களை விமான ஹெலிகாப்டரில் சென்று  நேற்று நேரில் ஆய்வு செய்தார் கேரள் முதல்வர் பினராயி விஜயன். அவருடன், கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகரன், மாநில காவல்துறை தலைவர் லோக்நாத பெஹ்ரா ஆகியோர் பார்வையிட்டனர். மத்திய அரசிடம் இருந்து உதவி கோரியுள்ள கேரள அரசிற்கு தற்போது ராணுவ உதவிகள் வந்து சேர்ந்துள்ளன.

 

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் செல்ல முடியாத பல இடங்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் சென்று மக்களை மீட்டுவருகிறது. இந்நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் அதிக அளவில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

சார்ந்த செய்திகள்