புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று (28/04/2021) 6,833 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 1,258 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 997 நபர்களுக்கும், காரைக்காலில் 96 நபர்களுக்கும், ஏனாமில் 125 நபர்களுக்கும், மாஹேவில் 40 நபர்களுக்கும் என 1,258 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 8,444 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 47,080 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், நேற்று மட்டும் புதுச்சேரியில் 10 நபர்கள் உயிரிழந்ததால், மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரக்கூடிய வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் ஆகியோர் கரோனா பரிசோதனை செய்துகொண்டதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து, தாவரவியல் பூங்கா, கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி மையம் உள்ளிட்ட 4 மையங்களில் முகவர்களுக்கான கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதில் தற்போதுவரை பரிசோதனை செய்ததில், 20 முகவர்களுக்கு ராபிட் ஆண்டிஜன் முறையில் கரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.