இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், ஏதாவது ஒரு நிறுவனம் இரு இலக்க எண்களில் காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தினாலும், அங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். அண்மையில் குஜராத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வெறும் 10 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் அப்ளிகேசனுடன் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக போலீசாரின் உதவியுடன் நிலைமை சரிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் மும்பை ஏர் இந்தியா நிறுவனங்களில் 2,216 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பயணிகளின் உடைமைகளை விமானங்களில் ஏற்றி, இறக்கும் பணி மற்றும் உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட்ட சுமை தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று(16.7.2024) நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஊதியமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கட்கிழமை(15.7.2024) இரவே மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகம் முன்பு குவியத் தொடங்கினர். அதில் பெருமளவிலான பட்டதாரி இளைஞர்கள் நேர்காணலுக்கான அப்ளிகேசனுடன் குவிந்திருந்தனர். நேற்று காலை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேர்காணலுக்கு நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேரங்கள் கடந்தும் கூட்டம் குறையாததால் ஏர் இந்தியா நிறுவனம், அனைவரும் விண்ணப்பங்களை மட்டும் கொடுத்துச் செல்லுமாறும், அதனைச் சரிபார்த்து தகுதி உள்ள நபர்களை நேர்காணலுக்கு அழைப்பதாகவும் கூறி நேற்று நடைபெறவிருந்த நேர்காணலை ரத்து செய்தது. இந்த நிலையில் இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.