காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சியாம பிரசாத் முகர்ஜி பெயர் கொண்ட கல்லூரியில் நான் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளேன். ‘ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம்’ என்பது தான் அவர்களது கோஷம். அது ஒரு அரசியல் கோஷம்” என்று பேசினார்.
உடனே குறுக்கிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டுக்கு 2 கொடி, 2 பிரதமர்கள் எப்படி இருக்க முடியும்?. ‘ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம்’ என்பது அரசியல் கோஷம் அல்ல. அந்த தத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாட்டுக்கு ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம் தான் இருக்க வேண்டும் என்பதை கடந்த 1950ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் சொல்லி வருகிறோம். அதன்படி தான் நாங்கள் செய்துள்ளோம். அரசியல் சட்டம் 370வது பிரிவை யார் அமல் செய்திருந்தாலும் அது தவறு தான். அதை நரேந்திர மோடி சரி செய்தார். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ பிரச்சனையே இல்லை. ஆனால், மக்கள் அதை விரும்புகின்றனர். சவுகதா ராய் பேசியது ஆட்சேபனைக்குரியது” என்று பேசினார்.