Skip to main content

“75 சதவீத கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

"Strict action will be taken against schools that charge more than 75 percent fees" - Minister Namasivayam interview

 

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வியமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் 42 அரசுப் பள்ளிகளில் பிளஸ் டூ படித்த 2,056 மாணவர்கள், 2,890 மாணவிகள், 85 தனியார் பள்ளிகளில் படித்த 3,797 மாணவர்கள், 3,610 மாணவிகள் என 12,353 பேரும், இதேபோல காரைக்காலில் 2,321 பேர் என மொத்தம் 14,674 மாணவ மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது” என்று அவர் கூறினார். 

 

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நிலை குறித்தும், பிரச்சினை குறித்தும் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் ஆராயப்படும். மேலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவசக் கல்வி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம், ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பிரச்சனைகள், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசுப் பள்ளிகளின் தரம் குறித்தும் ஆலோசிக்கப்படும். தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்