சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலின் 91 ஆவது பொதுச்சபை கூட்டம் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த 91 ஆவது பொதுச்சபை கூட்டம் நடத்துவது யார் என்பது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியாவுக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்ததையடுத்து, 2022 ல் இந்த கூட்டம் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக 1923 ஆம் ஆண்டு இன்டர்போல் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் இந்தியா உட்பட 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு சார்பாக ஆண்டுதோறும் ஒவ்வோர் நாட்டில் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த வகையில், இன்டர்போலின் தலைமைச் செயலாளார் ஜெர்கன் ஸ்டோக், கடந்த ஆகஸ்டில் இந்தியா வந்தபோது, 2022 ஆம் ஆண்டு இந்த கூட்டத்தை இந்தியாவில் நடத்தலாம் என அமித்ஷா விருப்பம் தெரிவித்தார்.
இதனையடுத்து சிலியின் சாண்டியாகோவில் நடந்த இன்டர்போலின் 88வது பொதுச்சபைக் கூட்டத்தில், இதற்கான ஆதரவை கோரி இந்தியா சார்பில் முன்மொழியப்பட்டது. இதில் பெருவாரியான நாடுகள் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்ததால், 2022 ஆம் ஆண்டு இன்டர்போல் அமைப்பின் 91 ஆவது சந்திப்பு இந்தியாவில் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது.