தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சீரம் சாம்பசிவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் பேர் உயிரிழந்ததையடுத்து இன்றும் (ஜூலை 30), நாளையும் (ஜூலை 31) கேரள அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலாளர் வேணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மாலாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் உயிர் சேதம் மற்றும் உடமை சேதம் ஏற்பட்டதற்கு அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. இந்த துயரத்தை அடுத்து, ஜூலை 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் அரசு அதிகாரப்பூர்வ துக்கத்தை அறிவிக்கிறது. எனவே இந்த இருநாட்களில் மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். அதே சமயம் அரசு சார்பில் திட்டமிட்டுள்ள பொது விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.