சிவசேனா கட்சியைச் சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ள ஏக்நாத் ஷிண்டே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார். அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கவுகாத்தியில் தங்கியுள்ள 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவர்கள் அனைவரும் வரும் ஜுன் 27- ஆம் தேதி அன்று திங்கள்கிழமைக்குள் தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.