ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக ஆரம்பம் முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி காஷ்மீர் தொடர்பாக ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்தியா நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எல்லாம் மனித உரிமை மீறல்களை பற்றி பேசலாமா” என பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் அமெரிக்காவிற்குள் நுழையக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது" என்று பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்று வரும் வேளையில், குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என்று மோடியை குறிப்பிட்டு பேசிய பாகிஸ்தான் அமைச்சருக்கு எதிராக பாஜகவின் முன்னணி தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், உத்திரப் பிரதேச மாநில பாஜகவின் விவசாய பிரிவு தலைவர் மனுபால் பன்சால் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் "நாம் மதித்து போற்றக்கூடிய பிரதமர் மோடி பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் நாகரிகமற்ற வகையில் கருத்து தெரிவித்து உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையைக் கொண்டு வருபவருக்கு 2 கோடி ரூபாய் சன்மானத்தை அறிவித்துள்ளேன்" என்றார்.