இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை காரணமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் தினமும் 3,500 க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று காரணமாக பலியாகி வருகிறார்கள். காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று அனைவரும் இந்த தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.
கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல் அக்குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதேபோல் பல்வேறு மாநிலங்களும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பி.எம் கேர்ஸ் நிதி மூலம் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு 23 வயது பூர்த்தியான பிறகு இந்த 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.