![](http://image.nakkheeran.in/cdn/farfuture/NDYtBGkIaYdiKYZU1JTsOn7Y5hevIWmCqbyXD_MgzoQ/1533347682/sites/default/files/inline-images/tasmac%20tamil%20nadu%20500.jpg)
பார்வசதியுடன் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் மூடக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடுவது தொடர்பான வழக்கு, நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை ஏன் பிற்பகல் 2 மணிக்கு திறக்கக்கூடாது என ஏற்கெனவே கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் மட்டும் தான் மதியம் 12 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் காலை 10 மணிக்கெல்லாம் திறக்கின்றனர் என்றார்.
அதற்கு நீதிபதிகள் தமிழகத்தை பிற மாநிலங்களுடன் ஒப்பிடக்கூடாது. தமிழகத்தில் மது விற்பனை அதிகமாக உள்ளது. எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் பார்களில்தான் தொடங்குகின்றன. எனவே, பார்வசதியுடன் இருக்கும் மதுக்கடைகளை ஏன் மூடக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
மேலும் அரசு தேர்தல் வாக்குறுதியாக மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்திருந்தது. அதன்படி, 2016, 2017-ல் சில மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், 2018-ல் இதுவரையில் மதுபான கடைகளை மூடுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, இது தொடர்பாகவும் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 2-க்கு தள்ளிவைத்தனர்.