Skip to main content

மு.க.ஸ்டாலின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு: அமைச்சர் ஜெயக்குமார்

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

 

மு.க.ஸ்டாலின் சொல்லும் சில கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், 

நடிகர் கமல்ஹாசன் ஒரு தலைவருக்கு உள்ள முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்கிறார். அவரது பேச்சு பலருக்கு புரியாது. கட்சி நடத்துவதற்கான அனுபவமும் இல்லை. அவர் காலையிலேயே பள்ளிக்கூடம் சென்று வருகிறார். பள்ளிக்கூடம் என்பது அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பள்ளிக்கூடத்துக்கு சென்றா அரசியல் நடத்தினார்? 6½ கோடி தமிழ் மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்தனர். புரட்சித்தலைவி அம்மா எம்.ஜி.ஆரை பின்பற்றி திட்டங்களை முன்னெடுத்து சென்றார். அவர் மாபெரும் தலைவராக இன்றைக்கும் மக்கள் மத்தியில் விளங்குகிறார். பள்ளிக்கூடத்துக்கு காலை 7.30 மணிக்கு சென்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் தான்.

கேள்வி:- ஆட்சியாளர்கள் வாக்குறுதிதான் கொடுக்கிறார்கள். எதையும் நிறைவேற்றுவது கிடையாது. இதை கேட்டால் திசை திருப்புகிறார்கள் என்று கமல் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளாரே?

பதில்:- காய்ச்சமரம்தான் கல்லடிப்படும் என்பார்கள். இன்றைக்கு எங்களை எதிர்த்தால்தான் அவர்கள் வெளியே தெரிகிற அளவுக்கு நிலைமை. அதனால் வேறு வழி இல்லாமல் எங்களை எதிர்க்கிறார்கள். இல்லையென்றால் அவர்களை யாருக்கும் தெரியும். பொத்தாம் பொதுவான கருத்தை சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். திட்டங்களில் குறை சொன்னால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் புரியாத மொழியில் சொல்லி விமர்சிக்கிறார். அவர் சொல்வது யாருக்கும் புரியவில்லை. இப்படி பேசுவதை காழ்ப்புணர்ச்சி என்று கருத முடியும். அவரது பேச்சு ஆக்கப்பூர்வமான கருத்தை காட்டுவதாக இல்லை.

எங்களுக்கு பரம எதிரி தி.மு.க. ஆனால் மு.க.ஸ்டாலின் சொல்லும் சில கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. இவர்கள் எல்லோரும் வெறும் காகிதப்பூ என்று ஸ்டாலின் சொன்னதில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. உண்மையில் இவர்கள் எல்லோரும் காகிதப் பூக்கள்தான். நிச்சயமாக இந்த காகித பூ மனமும் வீசாது. மலரவும் மலராது. வெறும் காகித பூவாகத்தான் இருக்கும். விதை கூட மரபணு மாற்றப்பட்ட விதை. இந்த விதை யாருக்கும் பயன்படாத விதை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்