
திட்டமிட்டபடி இன்று மின்வாரிய ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 40,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக மின்வாரிய ஊழியர்களுக்கும் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க கோரி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மின்வாரிய நிர்வாகமும் ஊழியர்கள் கேட்கும் உயர்வை தர ஒத்து கொண்டது. இது தொடர்பான இறுதி வரைவு நிதித்துறை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் பிரச்சனை நிதித்துறை மூலம் வந்தது மின் துறை ஊழியர்கள் கேட்கும் 2.57 மடங்கு ஊதிய உயர்வை தர முடியாது என கடிதம் அனுப்பி நிதித்துறை அதிர்ச்சி அளித்தது.
இதனால் ஒப்பந்தம் இழுபறியில் உள்ளது. இதனால் அரசை கண்டித்து சிஐடியு, என்எல்ஓ, பிஎம்எஸ் ஆகிய 3 தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி 23ம்தேதி ஸ்டிரைக் நடத்தப்போவதாக நோட்டீஸ் அளித்தனர்.
இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை ஆணையர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிப்ரவரி 12ம்தேதிக்குள் ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனால் ஸ்டிரைக் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் மீண்டும் ஒப்பந்தம் போடுவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். உடனே கடந்த 9ம் தேதி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் சுமதி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நேற்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில், திடீரென அதை ஒத்தி வைப்பதாக தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.
இது தொழிற்சங்கத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்த போராட்டம் நடப்பதாக அறிவித்தனர். அதன்படி தமிழகம் மின் வாரிய ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் நோட்டீஸ் அளித்த 3 சங்கங்களை தவிர 7 சிறிய சங்கங்களும் கலந்து கொள்கின்றனர்.