இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காசா மீது தரைவழி தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் அதனை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களும், தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், காசாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இணையச் சேவை இல்லாததால் தற்போது என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஐ.நா ஊழியர்கள் உள்படப் பலரின் உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐ.நா கலவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.ஏ.எஃப் ஆகிய இரு நிறுவனமும் தங்களது செய்தியாளர்களின் பாதுகாப்பு குறித்து இஸ்ரேலுக்குக் கடிதம் எழுதியிருந்தது. அதற்கு இஸ்ரேல் தரப்பில், நாங்கள் ஹமாஸின் இடங்களைக் குறிவைத்து தீவிரமாக தாக்கி கொண்டிருக்கிறோம்; ஹமாஸ் மீதான எங்களின் தாக்குதலின் போது கட்டிடங்கள் சேதமடையும். சில நேரங்களில் ஹமாஸ் அமைப்பின் வெடிகுண்டுகளும் தவறுதலாகக் கட்டிடங்களை சேதப்படுத்தும். இப்படியான சூழ்நிலையில் உங்களில் செய்தியாளர்களின் உயிருக்கும் பொறுப்புக்கும் நாங்கள் பொறுப்பேற்கமுடியாது. அதனால் உங்கள் ஊழியர்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்குப் பதிலளித்துள்ளது. இஸ்ரேல் - ஹாமஸ் இடையே நடைபெற்றுவரும் போரில் இதுவரை 27 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.