சந்தனக் கடத்தில் வீரப்பன் கூட்டாளியாக இருந்தவர் சைமன். 1993ல் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சைமன், கடந்த 27 ஆண்டு காலமாக மைசூர் சிறையில் உள்ளார். தொடக்கத்தில் ஆயுள் தண்டனையாகவும் பிறகு மரண தண்டனையாகவும் இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேருக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தின. இந்த நிலையில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இருந்த சைமன் கடந்த ஓராண்டு காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். சிறையில் மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டாலும் தன்னை வெளியே அனுப்பி மருத்துவ சிகிச்சை எடுக்க அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்திடம் சைமனும், அவரது குடும்பத்தினரும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில்தான் திடீரென நேற்று இரவு சைமன் உடல்நிலை மிகவும் மோசமாகவே சிறை நிர்வாகம் அவரை மைசூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சைமன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இறந்துபோன் சைமனுக்கு திருமணம் ஆகவில்லை. கொள்ளேகால் அருகே உள்ள ஒட்டர்தொட்டிதான் அவரது சொந்த கிராமம். சந்தன வீரப்பன் வழக்கில் சிக்கி கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு பிறகு மைசூர் நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் வரை போராடியும் பலன் இல்லாமல் 27 வருடங்களாக மைசூர் சிறையிலேயே தனது வாழ்நாளை கழித்து சிறையிலேயே உயிர் விட்டுள்ளார் சைமன். சிறையில் அவர் சித்தரவதை செய்து கொல்லப்பட்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் கூறுகிறார்கள்.