ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவரது தாயார் நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘எனது மகனின் விடுதலை குறித்த தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில், ராகுல்காந்தி கூறியுள்ள கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளனர். முதல்வரும் எனது மகன் விடுதலை குறித்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். எனவே, மாநில அரசு விரைந்து செயல்பட்டு மத்திய அரசுடன் பேசி எனது மகன் விடுதலை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட ராகுல்காந்தியிடம், ராஜீவ்காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளை மன்னித்துவிட்டீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, ‘நாங்கள் பல ஆண்டுகளுக்கு வருத்தம் கொண்டிருந்தோம் மற்றும் காயப்பட்டிருந்தோம். அதீத கோபத்துடனும் இருந்தோம். ஆனால், எப்படியோ மன்னித்துவிட்டோம், முழுவதுமாக மன்னித்துவிட்டோம். ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைவர் இறந்துகிடக்கும் புகைப்படத்தை டிவி நிகழ்ச்சியில் பார்த்தபோது எனக்குள் இரண்டு எண்ணங்கள் ஓடின. ஒன்று ஏன் இந்த மனிதரை இவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள். மற்றொன்று அவர் மற்றும் அவரது பிள்ளைகளை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டேன்’ என உருக்கமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.