சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மாநாட்டை கமலஹாசன் நடத்தும் நிலையில், கராத்தே விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் பெற்ற வீராங்கனைகளுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்திய கராத்தே சங்கத்தின் சார்பில், கராத்தே விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தங்கப்பதங்களை வென்ற கராத்தே வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தின விழாக்களை கொண்டாடியிருக்கிறார் சங்கத்தின் தேசிய தலைவர் தியாகராஜன்.
முன்னதாக, தியாகராஜனுடன் சென்று ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர் கராத்தே வீராங்கனைகள். அவர்களுக்குப் பரிசுகள் தந்து மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்த ரஜினி, "பெண்களுக்கு மிக பாதுகாப்பு அரணாக இருப்பது கராத்தே. எனக்குப் பிடித்த விளையாட்டுகளில் கராத்தேவுக்குத்தான் முதலிடம். நான் சினிமா நடிகராக அறிமுகமாகி ஆக்சன் ஹீரோவாக வளர்ந்ததற்கு கராத்தேதான் எனக்கு கைக்கொடுத்தது. அந்த கலையைக் கற்று பல்வேறு மெடல்களை நீங்கள் பெற்றிருப்பது சந்தோசம். கராத்தே விளையாட்டில் இன்னும் பல சாதனைகளைப் பெற வேண்டும்" என வீராங்கனைகளை வாழ்த்தினார் ரஜினி.
ஒவ்வொரு வீராங்கனைகளையும், அவர்கள் கலந்துகொண்ட போட்டிகளையும், சாதித்த சாதனைகளையும் ரஜினியிடம் விளக்கினார் தியாகராஜன்.