Skip to main content

ஜெயலலிதா மீது எனக்கு பயமா? -கிண்டல் செய்தவர்களுக்கு ரஜினி ஆவேச பதில்!

Published on 05/03/2018 | Edited on 06/03/2018

 

rajini rasikar

 

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார். முன்னதாக அவர் கோயம்பேடு வழியாக காரில் வரும்போது, பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டிருந்து வரவேற்றனர்.  இதனால் பூந்தமல்லி சாலை சில மணி நேரம் ஸ்தம்பித்தது.  போக்குவரத்து திணறியது.  காரில் நின்றபடியே கைகளை  அசைத்தபடியே மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார் ரஜினிகாந்த்.

விழாவில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினிகாந்த்,  ‘’இந்த விழாவில் அரசியல் விசயங்கள் பேசக்கூடாது என்று இருந்தேன்.   ஆனாலும், இப்போது பேசக்கூடிய அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.   சில விசயங்களை மட்டும் நான் இங்கே பேச விரும்பவில்லை.  அவற்றை வேற விழாக்களில் வேற மேடைகளில் வைத்துக்கொள்வோம்.  நான் இங்கே அரசியல் பேசும்படி ஏ.சி.எஸ். பற்றவைத்துவிட்டார்.


மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது.  அவருடையை கட்சியின் அதிமுக ஆட்சிதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.  ஊரெல்லாம் சென்று நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்.   எம்.ஜி.ஆரின் தாய்வீடு சினிமாதான்.  அவரை இதயதெய்வமாக வணங்கிய ஜெயலலிதாவுக்கும் சினிமாதான் தாய்வீடு.  அப்படி இருக்கும்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சினிமா கலைஞர்களை அழைத்து ஒரு பெரிய விழாவுக்கு அரசு ஏற்பாடு செய்யும்.  அந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருந்த பந்தத்தை பேசலாம் என்று இருந்தேன்.  அவருடனான தொடர்பை முழுமையாக பகிருந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன்.  அதற்கு ஈடாக ஏ.சி.எஸ். இங்கே விழா எடுத்திருக்கிறார்.


சினிமா உலகத்தில் இருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்கள்.  ஏன் சினிமா உலகத்தை வெறுக்கிறார்கள்.  நாங்கள் கரைவேட்டியை கழட்டி போட்டுவிட்டு, பேண்ட்-சர்ட் போட்டுக்கொண்டு உங்க ஹீரோயினோடு டூயட் பாட வரவில்லையே. நீங்கள் மட்டும் ஏன் நடிப்பை விட்டுவிட்டு கரைவேட்டி கட்டி மைக்கை பிடித்து அரசியலுக்கு வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.  நான் என் வீட்டில் ஒழுங்காக வேலை செய்கிறேன்.  67வயதிலும் ஒரு நடிகனான ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறேன்.   ஆனால், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லை.   
 

rajini mgr


 

96ல் இருந்து அரசியல்...அந்த தண்ணீர் என் மேலும் பட்டுவிட்டது. அதனால் அப்போதிலிருந்து அரசியல் பற்றியும், அதில் உள்ள நெளிவு சுழிவுகள் பற்றியும் தெரிந்துகொண்டு வருகிறேன்.   மதிப்பிற்குரிய பெரியவர் கலைஞர், மதிப்பிற்குரிய பெரியவர் அமரர் மூப்பனார் ஆகியோருடன் பழகியது,  எனது நண்பர் அமரர் சோவுடன் பழகி நானும் கொஞ்சம் அரசியல் கற்றுக்கொண்டிருக்கிறேன். எங்கெங்கே தப்பு நடக்கிறது. எதை எப்படி சரி செய்யலாம் என்று எனக்கு தெரியும். அதனால்தான் அரசியலுக்கு வருகிறே என்று சொன்னேன்.  

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும், நீங்கள் எல்லோரும் எனக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.   நீங்கள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால், ஏன் ஏளனம் பண்ணுறீங்க?

அரசியல் பாதை எனக்கு தெரியும். இது பூ இருக்குற பாதை.  முள்ளு இருக்கிற பாதை.  கல்லு, பாம்புகள் இருக்கிற பாதை என்று தெரிந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வருகிறேன். அதனால் என்னை ஏளனம் செய்வது, திட்டுவது வேண்டம்.  போதும் எல்லாவற்றையும் நிறுத்திக்கலாம்.  

சினிமாவில் இருந்து வருகிறவர்கள் எல்லோரும் அரசியலில்  எம்.ஜி.ஆர். ஆக முடியாது என்று சொல்கிறார்கள்.  நான் சொல்கிறேன்...சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.    எம்.ஜி.ஆர். ஒரு யுக புருசர்.  பொன்மனச்செம்மல். மக்கள் திலகம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப்போல் ஒருவர் பிறக்க முடியாது.  அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு.  

எம்.ஜி.ஆர் மாதிரி ஆவேன் என்று சொன்னால் அவனைப்போல் ஒரு பைத்தியக்காரன் இருக்க முடியாது.   ஆனால், அவர்  கொடுத்த அந்த நல்லாட்சி, அந்த ஏழைகளுக்கான ஆட்சி,  சாமான்ய மக்களுக்கான் ஆட்சி என்னால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  ( ரஜினி இப்படி பேசியதும் அரங்கில் எழுந்த கைத்தட்டலும், விசில் சத்தமும்  அடங்க சில நிமிடங்கள் ஆனது)

மக்களின் ஆசிர்வாதத்தினால், இளைஞர்கள் ஆதரவினால், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நல்ல சிந்தனையாளர்கள், ஆலோசகர்களை வைத்துக்கொண்டு   அந்த மாதியான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.( மிகவும் அழுத்தமான வார்த்தையாக பதிவு செய்தார் ரஜினி)

அது என்ன ஆன்மீக அரசியல் என்று கேட்கிறார்கள்.   நான் ஏற்கனவே சொன்னேன். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான , சாதி மத சார்பற்ற அறவழி ஆட்சிதான் ஆன்மீக அரசியல் என்று சொன்னேன்.   இதற்கு மேலும் சொல்கிறேன்.  ஆன்மீக அரசியல் என்றால் தூய்மையான அரசியல்.  இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மீக அரசியல்.  அப்படி என்றால் திராவிடத்தில் இறை நம்பிக்கை கிடையாதா?   தூய்மை கிடையாதா?   நேர்மை கிடையாதா?  இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதை.

கொள்கை பற்றி கேட்டால் தலை சுத்துது என்று சொல்கிறேன் என்று கூறுகிறார்கள்.   31ம் தேதி நான் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்ற முடிவை தெரிவிக்கப்போகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால், 29ம் தேதி அன்று, உங்கள் கொள்கை என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். இது எப்படியிருக்கு என்றால்...பெண் பார்க்க போகும்போதே எனக்கு அழைபிதழ் இல்லையா என்று கேட்பது போல் இருந்தது.   அந்த மாதிரி ஒரு ரிப்போர்ட்டர் என்னிடம் கேட்டபோது,  என்ன இப்படி எல்லாம் இருக்கிறார்களே என்று எனக்கு தலை சுற்றியது. பெரிய பெரிய அரசியல் தலைவர்களூம் மேடையில் இதைப்பற்றி கிண்டல் செய்கிறார்கள். ஐயா ஒண்ணு தெரிஞ்சுக்குங்க. ஜனங்க முன்னால் பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையாக பேசவேண்டும்.    

இப்போது ஏன் வருகிறீர்கள்?  ஜெயலலிதா இருக்கும்போது ஏன் வரவில்லை?  பயமா என்று கேட்கிறார்கள்.   ஜெயலலிதா இருக்கும்போதே நான் வாய்ஸ் கொடுத்தவன்.  இது எல்லோருக்கும் தெரியும்.  அப்படி என்றால், வெற்றிடம் இருக்குது என்று நினைத்து வரப்பார்க்கிறேன் என்று கேட்டால்,  ஆமாம், இப்போது வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவனுக்கு வெற்றிடம் இருக்கிறது.   தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.    ஜெயலலிதா, கலைஞர் என்று சக்திவாய்ந்த இரண்டு தலைவர்கள் இருந்தார்கள்.      ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.    அவர் கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தது மாதிரி இந்தியாவில் எந்த தலைவரும் அப்படி கட்சியை கட்டுக்குள் வைக்கவில்லை.   அந்தப்பக்கம் என் நண்பர் கலைஞர் 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை காப்பாற்றினார்.   அவர் இப்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்.  இந்த நிலைமையில் தமிழ்நாட்டுக்கு ஒரு தலைமை , தலைவர் தேவை.   அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக நான் வருகிறேன். என் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.’’ என்று விளக்கம் கொடுத்து தன் மீதான விமர்சனங்களை விளாசித்தள்ளினார் ரஜினி.


 

சார்ந்த செய்திகள்