அதிமுக கூட்டணியில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பா.ம.க.! ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி நீடிக்குமா? என இரு கட்சிகளிலும் சந்தேகம் வலுத்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியை உதறிவிட்டு, பாமகவை தனித்துப் போட்டியிட வைக்க அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீர்மானித்து விட்டதாக பாமக தரப்பிலிருந்து செய்திகள் கசிகின்றன.
சமீபகாலமாக டாக்டர் ராமதாஸ், வன்னியர் சமூகத்திற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தை அவர் கையிலெடுத்து போராட நினைப்பதும், எடப்பாடி அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளில் கருத்து சொல்வதும் பாமக தனித்து போட்டியிட தயாராகி வருகிறது என்பதை உறுதிப்படுத்தத்தான்.
அதேசமயம், பாமகவுடன் கூட்டணியை தொடர வேண்டாம் என எடப்பாடியிடம் அமைச்சர்கள் பலரும் சொல்லி வருவதால், பாமகவுடனான தேனிலவை முடித்துக்கொள்ளலாம் என எடப்பாடியும் தீர்மானித்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன.
இந்த நிலையில், 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை எந்த வடிவத்தில் நடத்துவது என்பதை முடிவு செய்ய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழுவை நவம்பரில் நடத்துகிறார் டாக்டர் ராமதாஸ். இணைய வழியில் நடத்தப்படும் அந்த கூட்டுப் பொதுக்குழுவில், இது குறித்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்கின்றனர் பாமகவினர்.