டாஸ்மாக் வழக்கில் டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தங்கள் தரப்பையும் விசாரிக்கக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும், ஊரடங்கு முடியும்வரை மூடவேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தநிலையில் டாஸ்மாக் வழக்கில் டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தங்கள் தரப்பையும் விசாரிக்கக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சங்கத்தின் தலைவர் கே.ஆனந்த செல்வம், டெல்லியில் உள்ள தமிழ் வழக்கறிஞர்கள் சார்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட வழக்கறிஞர் சங்கத்தின் வாதத்தை கேட்ட பின்பே தீர்ப்பு வழங்க வேண்டும்“ என உச்ச நீதிமன்ற பதிவாளர் அவர்களை கேட்டு கொண்டு உள்ளார்.
இதேபோல் டாஸ்மார்க் வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தை சேர்ந்த எம்.பி. என்ற முறையில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். நாளை தமிழக அரசின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வரும்போது டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும், வைகோ சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கமும் வைகோவும் டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பங்கு பெறாத போதிலும் இவர்களது கேவியட் மனுவை வழக்கறிஞர்களின் நீண்ட விவாதத்திற்குப் பின் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார் உச்சநீதிமன்ற பதிவாளர்.
டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் ஜல்லிக்கட்டு உள்பட தமிழக பிரச்சனைகளுக்காக பல வழக்குகளில் இதுபோன்று பங்குபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.