கட்சியில் பதவி பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 12 லட்சம் ஏமாற்றியதாக ஜெ.தீபா மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜா ஆகியோர் மீதான புகாரை விசாரிக்கவும், முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை வியாபாரியான ராமசந்திரன் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். பேரவை செலவுகளுக்காகவும், கட்சி அலுவலக புனரமைப்புத் செலவுகளுக்காகவும், ஜெ.தீபாவின் குடும்ப செலவுகளுக்காகவும் பணம் வேண்டுமென தீபா மற்றும் அவரது உதவியாளர் ஏ.வி.ராஜா ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பணத்தை திரும்ப கேட்டபோது, அமைச்சர் பதவி வாங்கி தருவதாக ஏமாற்றியும், அலைக்கழித்ததுடன் மட்டுமல்லாமல் இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி அளித்த புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மேற்கொண்டு வழக்கு பதியாமலும், விசாரணை நடத்தாமலும் இருந்ததால், தன் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ராமச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு, புகார் குறித்து விசாரணை செய்யவும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
சி.ஜீவா பாரதி