தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நாகை மாவட்டத்திற்கு வருகை தருவதை புறக்கணிக்கிறோம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான எம். தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நாகை மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி, எனது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியான அவுரிதிடலில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக கூறி, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு போட்டியாக இரட்டை நிர்வாகத்தை உருவாக்கும் போக்கை கவர்னர் பின்பற்றி வருவது, கூட்டாச்சி தத்துவத்திற்கும் மாநில சுயாட்ச்சிக்கும் எதிரானது என்பது எமது மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடாகும்.
அந்த வகையில் கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே சட்டமன்றத்தில் கவர்னரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்.
அதே நிலைப்பாட்டின்படி, எனது தொகுதியான நாகைப்பட்டினத்தில் கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சியையும் புறக்கணிக்கின்றேன். கவர்னர் தனது அதிகார எல்லைக்குள் இருந்து கொண்டு மரபுகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.