
சென்னை டி.ஜே வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற சிந்து நாகரிகம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, “செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அணு இயற்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல் சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம் என்ற வரலாற்று உண்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ளது. நமது விரிவான தேசிய மறுமலர்ச்சிக் காலத்தில், சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும். சிந்து சமவெளி நாகரிகம் எனச் சொல்லாமல் சிந்து-சரஸ்வதி நதி நாகரிகம் எனக் கூற வேண்டும். சிந்து- சரஸ்வதி நதி நாகரிகம் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது” என்றார்.
இந்த நிலையில் ஆளுநரின் பேச்சு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் 'சிந்து-சரஸ்வதி நாகரிகம்' என்ற பாடத்தின் மூலம் இல்லாத ஒரு நாகரிகத்தை கட்டமைக்க முயற்சி செய்தது பாஜக, இன்று ஆளுநர் 'சிந்து சமவெளி நாகரிகம்' என்பதற்கு பதிலாக 'சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்று அழைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் ஆளுநர்.
பா.ஜ.க அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் 'வாட்ஸ் அப் பல்கலைக்கழக'த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்.அதனால்தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.