சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாய்கள் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தி உள்ளனர். அந்த சோதனைக்குப் பின்னர் வீட்டில் வெடிகுண்டு இல்லை என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் இந்த மிரட்டலை விடுத்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை நெல்லிக்குப்பத்தில் இருக்கும் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. மேலும், சிறுவனை எச்சரித்து, பெற்றோரிடம் கைப்படையாக எழுதி வாங்கி கொண்டு போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சிறுவனின் தந்தை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி சார் மன்னித்துவிடுங்கள். என் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன். உங்கள் படம் எது வந்தாலும் 3வது, 4வது டிக்கெட் என் டிக்கெட்டாகத்தான் இருக்கும். அண்ணாத்தப் படத்தையும் நாங்கள் பார்ப்போம். மனநிலை பாதிக்கப்பட்ட என் மகன் வீட்டில் இருந்த செல்போனை எடுத்து போன் பண்ணிவிட்டார். மன்னித்து விடுங்கள். உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்தினர், அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்ததும், அவர்கள் இல்லத்திற்கு சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.