திமுக பிரமுகர் யுவராஜ் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான விருகம்பாக்கம் ஆர்.ஆர். அன்பு பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சேலம் ஆர்.ஆர். அன்பு உணவகத்திற்கு கடந்த திங்கள்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரியாணி தீர்ந்து போய்விட்டதாக கூறிய கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கூறினார்.
இந்நிலையில், இன்று காலை திமுக பிரமுகர் யுவராஜ் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான விருகம்பாக்கம் ஆர்.ஆர். அன்பு பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.