தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்தனர். இதில் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மூன்றாவது நாளாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அசாதாரண நிலை தொடர்ந்து வருகிறது.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.