திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்யப்படுகிறார் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தணிக்கைக் குழு அறிக்கை தாக்கலாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திமுக தலைமைக் கழகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவினை திரும்பப் பெற 27-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 27-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அக்கட்சியின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம், வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தத நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்யப்படுகிறார் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். நாளை மறுநாள் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார்.