Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வாய்ப்பு..! -தலைமை தேர்தல் அதிகாரியிடம் செந்தில்பாலாஜி பரபரப்பு புகார்..!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021
Senthilbalaji

 

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி இந்த மையங்களில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

 

இந்தநிலையில், ''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு அவற்றைக் காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக்கொள்ளட்டும் என்று நாம் இருந்திடலாகாது. நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக் கூடாது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மையங்களைப் பாதுகாப்பது நம் கடமை.  

 

வேட்பாளர்களும், நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பாதுகாக்கப்பட்ட மையங்களை 24 மணி நேரமும், இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும். வாக்குப்பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் 'டர்ன் டியூட்டி’ அடிப்படையில் அமர்ந்து கண்காணித்திட வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ''வாக்குப்பதிவு நிறைவுபெற்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்'' என கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

 

இந்தநிலையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி மாவட்ட தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளார்.

 

அதில், நான் 135 கரூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமாவேன். கடந்த 06.04.2021 தேதி அன்று நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று மேற்படி தேர்தலில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளில் பதிவான வாக்குபெட்டி இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக கரூர் மாவட்டம் குமாரசாமி பொறியியல் கல்லூரில் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா மூலமாக நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

மேற்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிட அறையின் பின்புறம் உள்ள பகுதிகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் பின்புற வழியாக வெளியாட்கள் சென்று அங்குள்ள வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. 

 

ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஒருசில கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களை மேலும் அதிகரித்து மூன்று கட்டமாக சுழற்ச்சி முறையில் பணியமர்த்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

 

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிட அறையின் பின்புறம் உள்ள பகுதிகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் பின்புற வழியாக வெளியாட்கள் சென்று அங்குள்ள வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்று செந்தில்பாலாஜி கூறியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்