மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குடியிருப்போரின் ரேஷன் அட்டை வெளி மாவட்டங்களை சேர்ந்தவராக இருந்தால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. இது தொடர்பாக முடிவெடுக்க நேற்று உயரதிகாரிகள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி ரேசன் கடைகளில் கிடைக்கும் விண்ணப்பங்களில் வசிக்கும் தெரு, பாதிக்கப்பட்ட பகுதி, வங்கி எண் உள்ளிட்ட தகவல்களை கொடுத்தால் அதிகாரிகள் இடத்திற்கே வந்து ஆய்வு செய்து உண்மையிலேயே அந்த பகுதியில் விண்ணப்பதாரர் வசித்தாரா என்பதை உறுதி செய்து, பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தகவல் வருவாய்த்துறை சார்பில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.