விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளி்யிட்டுள்ள அறிக்கை:
’’விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் அண்மையில் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. அதில் சமயன் என்கிற எட்டு வயது சிறுவன் பலியாகியிருக்கிறான். அவனது தாய் ஆராயி என்பவரும் அவனது தமக்கை 13 வயது சிறுமி தனம் என்பவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆராயி கணவரை இழந்தவர். ஐந்து குழந்தைகளுக்குத் தாய். சிறுமி தனம் ‘கூட்டு வன்புணர்ச்சிக்கு’ ஆளாக்கப்பட்டிருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவருகிறது. மற்ற இருவரும் உயிர் பிழைப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மனநோயாளிகளால் மட்டுமே இத்தகைய மிருகத்தனமான கொடூரத்தைச் செய்யமுடியும். நெஞ்சை உறையவைக்கும் அந்தக் கொடுமை நடந்து நாட்கள் பல கடந்த நிலையிலும் காவல்துறையினர் இன்னும் குற்றவாளிகளைக் கண்டறியவில்லை. வழக்கம்போல் தலித் இளைஞர்களையே சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற பல சம்பவங்களில் காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் வழக்குகளை மூடியுள்ளனர். இவ்வழ்க்கையும் ‘சந்தேக மரணம்’ என விசாரிப்பதாகக் காலம்கடத்தி ஒருவரையும் கைதுசெய்யாமல் வழக்கை முடித்துவிடுவார்கள் என்கிற அச்சமுள்ளது.
உண்மை அறியும் குழுவினர், இந்தக் கொடுரமான வன்முறை வெறியாட்டத்தில் பக்கத்துக் கிராமத்தைச் சார்ந்த இராஜேந்திரன் என்கிற நபர்தான் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளனர். அவர் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் அவருக்கும் ஆராயி குடும்பத்துக்கும் இடையில் நிலப்பிரச்சினை இருந்தது என்றும் அக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இதுவரையில் இராஜேந்திரன் என்பவரைப் காவல்துறையினர் விசாரிக்கவே இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஈவிரக்கமற்ற இந்தக் கொடூரமான தாக்குதலை, படுகொலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், இந்த வழக்கைக் காவல்துறையினர் விசாரித்தால் நீதி கிட்ட வாய்ப்பில்லை என்பதால் இதனை சிபிஐ விசாரிக்க ஆணையிடவேண்டுமென வலியுறுத்துகிறோம்.’’