புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் 3 வயது பெண் குழந்தையுடன் வந்து பிரசவத்திற்காகச் சேர்ந்துகொள்கிறார். அவருக்கு துணையாக உறவினர்கள் யாரும் வரவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்தக் கர்ப்பிணியின் நிலை அறிந்து சிறு சிறு உதவிகள் செய்கிறார்கள். அந்த உதவி அவருக்குப் பெரிதாக இருந்தது. மருத்துவமனையில் கொடுக்கும் உணவை தனக்கும் தன் 3 வயது குழந்தைக்கும் கொடுத்து பசியாறிக் கொள்கிறார்.
சில நாட்களில் சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண்குழந்தை பிறந்தது. அடுத்த 3 நாட்களில் மருத்துவமனை பெட்டிலிருந்து வெளியே வருகிறார். சொந்த ஊருக்கு போனால் என்ன சொல்வார்களோ என்ற சந்தேகம் அவரை அடுத்த அடி எடுத்து வைக்கவிடவில்லை. ஒரு கையில் பிறந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு மறு கையில் தன் 3 வயது பெண் குழந்தையுமாக வார்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண், பார்வையாள்கள் தங்கும் ஷெட்டில் தனது சேலையால் ஒரு தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறார். மற்றவர்களைப் பார்க்க வருபவர்கள் கொடுப்பதை உண்டு அதே ஷெட்டில் இரவு, பகல், வெயில், மழை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு தங்கிவிட்டார்.
அடுத்து தன் குழந்தையைப் படுக்க வைக்க பாய், துணிகள் இல்லை. அந்தப் பகுதியில் ஒரு கடை விளம்பரப் பதாகை கிடக்க, அவற்றை எடுத்துவந்து தரையில் விரித்து பிறந்த குழந்தையைப் படுக்க வைத்திருக்கிறார். இதைப் பார்த்த ஒரு சமூக சேவகி உணவு மற்றும் சிறு உதவிகளைச் செய்து வருகிறார். குளிர், கொசுக்கடியை மூவரும் ஏற்கிறார்கள்.
இந்தப் பெண் குறித்து நம்மிடம் பேசிய சமூக சேவகி டெஸ்சி ராணி, பொன்னமராவதி பனையப்பட்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. கணவருக்கும் தீராத நோய். அவரும் இறந்துவிட்ட நிலையில், தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தபோது இந்தப் பெண்ணைப் பற்றி நன்கு அறிந்த ஒரு இளைஞர் மறுவாழ்வு கொடுக்கிறார். அதை அந்தப் புதிய கணவரின் அம்மா உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அவர் இந்தப் பெண்ணை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும் தாய் மற்றும் உறவுகளையும் உதற முடியவில்லை. இந்த நிலையில் அவர் மின்வாரிய ஒப்பந்தப் பணியளராக வேலைக்குப் போன நிலையில் இந்தப் பெண்ணை மிரட்டி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தன் மகனுக்கும் சம்மந்தமில்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு மிரட்டி வெளியேற்றி விடுகிறார்கள் மாமியார் மற்றும் அவரது உறவினர்கள்.
அதன் பிறகு எங்கே போவது என்று நினைத்தவர், மருத்துவமனைக்கு வந்து தஞ்சமடைந்துள்ளார். குழந்தை பிறந்த தகவல் அறிந்து தன் கணவர் வருவார், வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஷெட்டில் தங்கி உள்ளார் என்றார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு நாம் தகவல் தெரிவித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அவரது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.