
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேற்று அதிரடியாக ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு நலத்திட்ட பணிகளையும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கே.புதுக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சரவணன் அங்கு கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம் வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அருகில் தொகுப்பு வீடுகளை பெற்ற பயனாளி கட்டிட பணிகள் முடிந்தும் தனக்கு முழுமையாக நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என கூறியதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஒன்றிய பொறியாளர்கள் ராமநாதன், மகேந்திரன் மற்றும் பணி மேற்பார்வையாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் எத்தனை வருடமாக இந்த ஒன்றியத்தில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு அவர்கள் 4 வருடங்களாக வேலை பார்க்கிறோம் என்றனர்.
“4 வருடங்களாக இந்த ஒன்றியத்தில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். பயனாளிகளின் கஷ்டங்கள் உங்களுக்கு தெரியவில்லை. அமைச்சர் இந்த தொகுதி மக்கள் நலன் கருதி அதிகப்படியான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அது முழுமையாக மக்களை சென்றடைய வேண்டாமா..” என்று கேள்வி கேட்டதோடு உங்களுடைய நடவடிக்கை முறையை மாற்றுங்கள் உங்களுக்கு இரண்டு மாத காலம் அவகாசம் தருகிறேன், நீங்கள் வேறு ஒன்றியத்திற்கு பணிக்கு சென்றுவிடுங்கள். கொடைக்கானல், குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்றுவிடுங்கள். அங்கு தான் நான் அடிக்கடி ஆய்விற்கு வர முடியாது என்றதோடு உங்களுக்கு மிக அருகிலேயே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அதன்பின்னர் அங்குள்ள மருத்துவமனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்களிடம் முறையாக பரிசோதனைக்கு வருகிறீர்கள் எந்த கிராமத்திலிருந்து வருகிறீர்கள் அவசர கால சிகிச்சைக்கு எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதோடு கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன்பின்னர் மருத்துவமனை வளாகத்தை சுற்றிப் பார்த்த அவர் கர்ப்பிணி பெண்களுக்கு பலன் தரக்கூடிய கருவேப்பிலை, முருங்கை மற்றும் நவா, மாதுளை போன்ற மரக்கன்றுகளை நட ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதோடு அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றார்.
அதன்பின்னர் அருகில் உள்ள கிராம ஊராட்சி நர்சரி பூங்காவிற்கு சென்ற அவர் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து கிராம ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் நட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பின்னர் அருகில் உள்ள மேல்நிலைத் தண்ணீர் தொட்டியை பார்வையிட்ட அவர் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், மேல்நிலைத் தண்ணீர் தொட்டியை சுற்றி இரும்பு வேலி போட வேண்டும் என உத்தரவிட்டார். அங்கிருந்து புறப்பட்ட அவர் சில்வார்பட்டி ஊராட்சி சுயஉதவிக்குழு பெண்கள் பராமரிக்கும் தென்னங்கன்றுகள் வளர்ப்பு மையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாடிப்பட்டி மேற்கு பகுதி காலனிக்கு சென்ற அவர் மிகவும் இடிந்த நிலையில் உள்ள ஓட்டு வீட்டை பார்வையிட்ட அவர் ஏன் இவருக்கு கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம் வீடுகள் வழங்கவில்லை என கேட்டதோடு வீட்டின் உரிமையாளரான வயதான முதியவரை அழைத்து உங்களுக்கு ஏன் இதுநாள் வரை தொகுப்பு வீடுகளோ, பிரதம மந்திரி வீடுகளோ வழங்கவில்லை எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த பயனாளி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துவிட்டேன். கடந்த பத்து வருடங்களாக எனக்கு தொகுப்பு வீடோ, பிரதம மந்திரி வீடோ, பசுமை வீடோ வழங்கவில்லை. மாற்றுத் திறனாளியான நான் எப்படி அடிக்கடி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்திக்க முடியும் என்றார்.

அவருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் சரவணன், ஐயா கவலைப்படாதீர்கள் கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம் வீடுகள் தேடி வரும் என்றார். அதன்பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், ஒன்றிய பொறியாளர்கள் மகேந்திரன், ராமநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோரை அழைத்து இந்த பயனாளி எத்தனை வருடம் உயிரோடு இருக்கப் போகிறார். சாகும்போது நிம்மதியாக சாக வேண்டும். அதற்கு அவருக்கு பாதுகாப்பான வீடு வேண்டும். அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
அதன் பின்னர் சுயஉதவிக்குழு மூலம் ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வரும் பயனாளிகளிடம் சென்று முறையான நிதி கிடைத்ததா எத்தனை ஆடு வாங்கினீர்கள் உங்களுக்கு இதன்மூலம் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக என கேட்டறிந்தார். முன்னதாக ரெட்டியார்சத்திரம் வேளாண் அறிவியல் மையத்திற்கு சென்று பார்வையிட்டார். ஆய்வின்போது மகளிர் திட்ட திட்ட அலுவலர் சதீஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரியப்பன், மலரவன், ஒன்றிய பொறியாளர்கள் மகேந்திரன், ராமநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், பணிமேற்பார்வையாளர் அழகுநிலா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் நாகலெட்சுமிரமேஷ், ஊராட்சி செயலர் ராஜேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.