பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அதே சமயம் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர்., காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.
அதில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என ஒருமித்த கருத்துகளைத் தீர்ப்பாக வழங்கினர். மேலும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
இதுதொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் (11.03.2024) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், எஸ்.பி.ஐ. வங்கிக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் வைத்திருந்தது. அதாவது, ‘26 நாட்கள் ஆகிறது இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?. எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ எனத் தெரிவித்திருந்தது. மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ. வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களைப் பெற்று வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி நேற்று முன்தினம் (12-03-24) வழங்கியது.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22 ஆயிரத்து 217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில், எஸ்.பி.ஐ வங்கி நேற்று (13-03-24) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், 22 ஆயிரத்து 30 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளது என்றும் 187 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படவில்லை என்றும் கூறியது. மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாகத் தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் பென் டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி.ஐ. வங்கி அளித்த தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தேர்தல் பத்திரங்களை நிறுவனங்கள், தனிநபர்கள் வாங்கிய விவரங்கள் தேதிவாரியாக இடம்பெற்றுள்ளன. அதாவது 337 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன.