கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் பல பள்ளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பள்ளிகளின் இந்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் போதிலும், அதற்கு சில வாரங்களுக்கு முன்பே தொழில் முடக்கம் தொடங்கி விட்டது. தமிழகத்தில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் அமைப்பு சாராத தொழில்களையே தங்களுக்கான வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்கள் என்பதால், அவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வருவாய் இழந்து தவிக்கின்றனர். அன்றாட உணவு உள்ளிட்ட தேவைகளுக்கே அரசின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்திருக்கும் அவர்களிடம் கல்விக்கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
ஊரடங்கு காலத்தில் தமிழக மக்களின் நிலையை சுட்டிக்காட்டி, அவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி தனியார் பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்பிறகும் கட்டண வசூல் தொடர்ந்த நிலையில், கல்விக்கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்க தடை விதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலர் அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்பிறகும் தமிழகத்தில் கட்டாயக் கட்டண வசூல் தொடர்கிறது.
வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது அதிகபட்சமாக ஓரிரு வாரங்களில் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி விடும். ஆனால், கரோனா வைரஸ் பேரிடர் எப்போது தணியும் என்று தெரியவில்லை. மூன்றாவது கட்ட ஊரடங்கு இம்மாதம் 17-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகும் எப்போது இயல்பு நிலை திரும்பும்?, எப்போது வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் கல்விக்கட்டணத்தை வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்பட மாட்டார்கள்; அவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிர்வாகங்கள் எச்சரிப்பது அழகல்ல. வணிக நிறுவனங்கள் இதுபோன்று கூறலாம்; கல்விக் கூடங்கள் ஒருபோதும் கூறக்கூடாது.
எனவே, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் மட்டுமாவது நிலைமை சரியாகும் வரை கல்விக்கட்டணம் வசூலிப்பதை கருணை அடிப்படையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். அதையும் மீறி கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.