![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/vD7LkCGaD3goHTJANNaI-pBNuRsh2pjk6ZeEpHoM6is/1534435330/sites/default/files/inline-images/school1_1.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல்வேறு இயற்கை சீற்றங்களால் பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியை தற்காலிகமாக கடந்த 2015 ஆம் ஆண்டு, அக்கிரமத்தில் உள்ள கிராம சபை கட்டிடத்திற்கு மாற்றினர். மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத கிராம சபை கட்டிடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆபத்துகளுடன் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/TPhv9WaCbyTzLv42BsStE560h0HhAxjUO8jZT_uh_Yw/1534435352/sites/default/files/inline-images/school%203.jpg)
6 வயது முதல் 12 வயது உடைய குழந்தைகள் படிக்கும் இந்த கிராம சேவை மையத்தில் உள்ள பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால், விஷத்தன்மை கொண்ட பாம்பு, தேள் வசிக்கும் , முட்புதர்களின் மறைவில் ஆபத்தை உணராமல், இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு, எவ்வித வழிவகை செய்யாமல் இருப்பதால், வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துவரும் கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
கழிவறை வசதி, குடிநீர் வசதி, போன்ற எவ்வித அடிப்படை வசதிகளே இல்லாத இந்த கிராம சபை கட்டிடத்தையே பள்ளிக்கூடமாக மாற்றியும், எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சத்துணவு பொருட்கள் பாதுகாக்கும் அறையாகவும், கிராம நிர்வாக அலுவலகத்தை சமைக்கும் அறையாகவும் பயன்படுத்துகின்ற மோசமான நிலைமைதான் நிலவுகிறது.
![h](http://image.nakkheeran.in/cdn/farfuture/eqF6k6OWgkJ6uKZelgPmpRF4eY_y5l8FkE453jlN_bg/1534435740/sites/default/files/inline-images/school%20h.jpg)
இதுதான் தமிழக அரசின் வளர்ச்சி, முன்னேற்றமோ என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
புதிய பள்ளி கட்டடிடம் கட்டுவதற்கு இடம் கொடுத்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிரந்தரம் இல்லாத இடத்தில் பள்ளிக்கூடம் மற்றும் சமையலறை இருந்து வருவதாலும், அடிப்படை வசதி இல்லாமல் , கல்வி பயலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கருதியும், தமிழக அரசு விரைந்து, காலந்தாழ்த்தாமல் தங்களது கிராமத்திற்கு பள்ளிக்கூடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.