Skip to main content

தலித் பக்தரை தோளில் சுமந்து வலம்வந்த அர்ச்சகர்! - (வீடியோ)

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். சாதிரீதியிலான படிநிலைகள் பல்வேறு துறைகளில் இன்னமும் பின்பற்றப்படுகின்றன. குஜராத் மாநிலத்தில் கோவில் விழா நிகழ்ச்சியைப் பார்த்த தலித் இளைஞர் உயர்சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார்.

 

இதுமாதிரியான தொடர் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், தெலுங்கானா மாநிலத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்தை விளக்கும் வகையில், தலித் பக்தரை அர்ச்சகர் ஒருவர் தனது தோளில் சுமந்து வலம்வந்த நிகழ்வு பலதரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

 

Dalit

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது சில்கூர். இங்குள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் 3ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முனிவாகன சேவா நிகழ்வு நடைபெற்றது. இதில், தலித் பக்தர் ஆதித்யா பரஸ்ரீ என்பவர் கழுத்தில் மாலை, தலைப்பாகையுடன் அலங்கரிக்கப்பட்டு வர, அவரை அந்தக் கோவிலின் அர்ச்சகர் சி.சி.ரங்கராஜன் தனது தோளில் தூக்கிக்கொண்டு வலம்வந்தும், கட்டியணைத்துக் கொண்டும், பூஜை நடத்தியும் கோவிலை வலம்வந்தார். இந்த நிகழ்வினை பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர். 

 

Dalit

 

இதுகுறித்து அர்ச்சகர் ரங்கராஜன், ‘இது 2,700 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மிகப் பழைமையான நிகழ்வாகும். இது சனாதன தர்மம் (இந்துமதம்) சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிசெய்கிறது. மனிதர்களுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்ட போதனைகளைச் செய்த வைஷ்ணவ மதபோதகர் ராமானுஜரின் ஆயிராமவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் தருணத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்த நிகழ்வு பொதுசமூகத்தின் சகோதரத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறது’ என உற்சாகமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வைஷ்ணவ கோவில்களிலும் இது கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Dalit

 

மேலும், இந்த உற்சவத்தின் நாயகனான ஆதித்யா பரஸ்ரீ, ‘ஒரு தலித்தாக நானும், என் குடும்பத்தினரும் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறோம். மகபூப்நகரில் உள்ள அனுமான் கோவிலில் நுழையக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது இன்னமும் பல கோவில்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய நிகழ்வு மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கக்கூடும் என நான் நம்புகிறேன்’ என உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.

 

 

தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்காத சூழல் பல நூறு ஆண்டுகளாக நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. பெரியார் போன்ற தலைவர்களால் கோவில் நுழைவுப்போராட்டங்கள் நடத்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் காக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தலித்துகளையும் கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. ஆனால், அது இன்றளவிலும் மிகப்பெரிய சவாலாகவே இருந்துவருகிறது. எஸ்.இ/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்திடும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்