
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் பகண்டை கூட்டுச் சாலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 25ஆம் தேதி நிழற்குடையின் மேற்பகுதியில் உள்ள கைப்பிடிச் சுவர் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பேசுபொருளாக மாறிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரிஷிவந்தியம் தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளில் முறைகேடு நடைபெறுவதாகவும் இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் இரா, குமரகுரு தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 பேரை கள்ளச்சாராயம் குடிக்க வைத்து கொலை செய்தது தான் திமுக அரசின் சாதனை என்றும் முறைகேடுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும், பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய போராட்டக்காரர்கள், “அரசு அதிகாரிகளின் துணையோடு திமுகவினர் அராஜகம் செய்து வருகின்றனர். அரசு கட்டிடப் பணிகளில் கலெக்டர் முதல் திமுக கடைசியில் தொண்டன் வரை கரப்ஷன் கலெக்ஷன் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக அரசு பொதுமக்களுக்கு நலம் சார்ந்த எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை கொடுத்ததில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு கையாடல் செய்துகொண்டு மக்களின் வயிற்றில் வருகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை திமுக அரசு தன்னுடைய பேர் ஆபத்திற்கு பயன்படுத்திக் கொண்டு வடிவேலு காமெடி போல கிணத்தை காணும்... கிணத்தை காணும்... என்று சொல்வதைப் போல நகைச்சுவையாக உள்ளது” பேசினார் .