விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக, ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே அண்மையில் தாக்கல் செய்த மனு ஒன்றில், பிப்ரவரி 16- ஆம் தேதி வரை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். ரிசர்வ் வாங்கி இதற்கு அளித்த பதிலில் ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, "வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்களின் கடன்கள் தள்ளுபடியா..? இவர்களெல்லாம் பாஜகவுக்கு நெருக்கமான நண்பர்கள். எனவே வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை மக்களவையில் வெளியிடாமல் பாஜக மறைத்தது" எனத் தெரிவித்தார்.
ராகுலின் இந்தக் கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீண்ட விளக்கம் ஒன்றையும் நேற்றிரவு கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "கடன் தள்ளுபடி என்பது வேறு, வாரக் கடனை கழித்து விட்டு கணக்கு வைத்திருப்பது என்பது வேறு. இது வங்கிகளின் வழக்கமான நடைமுறை. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வந்து சேராத கடன்களை கணக்குப்படி தனித்து வைப்பது என்பது வங்கி நடைமுறை. கணக்கிலிருந்து நீக்குதலுக்கும், தள்ளுபடிக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இந்த நடவடிக்கை, வங்கிகள் வாராக்கடனை வசூலிக்க எடுக்கும் நடவடிக்கையைத் தடுக்காது. இதைப் பற்றியெல்லாம் ராகுல் காந்திக்கு எப்படித் தெரியும். முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.