அம்மா கல்வியகம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார் அதிமுகவை சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதன். இந்த அமைப்பின் சார்பில் , நீட் தொடர்பான புத்தக கையேடு வெளியீட்டு விழா இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புத்தக கையேட்டினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 12 மணிக்கு துவங்குவதாக இருந்த விழாவுக்கு மதியம் 1 .10-க்கு வந்தார் எடப்பாடி.
ஆனால், அதற்கு முன்னதாக துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆஜராகியிருந்தனர். விழாவுக்கு தாமதமாக எடப்பாடி வந்தபோதும் உடனடியாக நிகழ்ச்சித் துவங்கவில்லை. பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்களிடம் விவாதித்த எடப்பாடி, " புத்தக கையேட்டினை நாம் வெளியிட வேண்டாம். கே.பி.முனுசாமி வெளியிடட்டும்" என சொல்லி, அதற்கான காரணங்களை விவரித்துள்ளார்.
அதனை எல்லோரும் ஆமோதித்த நிலையில், நீட் தொடர்பான கையேட்டினை வெளியிட்டார் முனுசாமி. வெளியீட்டு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் இடம்பெறாமல் ஒதுங்கிக்கொண்டார் முதல்வர் எடப்பாடி! "ஏன், இந்த திடீர் முடிவு? " என நாம் அதிமுகவின் மேல்மட்டத்தில் விசாரித்தபோது, " நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி அரசு எடுத்திருக்கிறது. மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், நீட் தொடர்பான கையேட்டினை முதல்வரே வெளியிட்டால் , நீட் தேர்வை எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டது போன்ற விமர்சனத்தை மாணவர்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் கிளப்புவார்கள் என எடப்பாடியிடம் அதிகாரிகள் சிலர் சொல்லியுள்ளனர். அப்போதுதான் எடப்பாடிக்கே புரிந்திருக்கிறது. முதல்வரிடம் இது தொடர்பாக அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்ததால்தான் விழாவுக்கு வர தாமதமானது.
நீட் கையேட்டை வெளியிடுவதில் இப்படிப்பட்ட எதிர்மறை சிக்கல் இருக்கிறது என்பதை அறிந்ததால் தான் நிகழ்ச்சியிலிருந்து விலகி நின்றார் எடப்பாடி. இதையும்தாண்டி எதிர்மறை விமர்சனம் வந்தால், ' அது கட்சி நிகழ்ச்சி ; அரசுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை ' என சொல்லிக்கொள்ளலாம் என முடிவு செய்தே விழாவிலிருந்து விலகி நின்றுவிட்டார் முதல்வர் எடப்பாடி " என்று சுட்டிக்காடுகிறார்கள்.