Skip to main content

கலைஞரின் இல்லத்துக்கு ஓ.பி.எஸ், ஜெயக்குமார் வருகை!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
kks


திமுக தலைவர் கலைஞரை நலம் விசாரிக்க சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் வருகை தந்ததனர்.

உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக திமுக தலைவர் கலைஞர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கலைஞரின் மூச்சுக்குழாயில் அவருக்கு பிரச்சனை இருப்பதன் காரணமாக அவருக்கு ட்ரக்கியாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவருக்கு குழாய் மாற்றும் பொருட்டு, காவேரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மாலையில் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கலைஞரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் அவர் வழக்கத்தைவிட அதிகமான சோர்வடைந்ததாகவும் தகவல்கள் பரவின. இதனை உறுதி செய்யும் வகையில், இன்று கலைஞரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், திமுக தலைவர் கலைஞரின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலையே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், கலைஞர் உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதாக காவேரி மருத்துவமனை சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, கலைஞரின் உடல்நிலையை விசாரிக்க துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் வருகை தந்ததனர்.

உடல்நிலையை கவனத்தில் கொண்டு, கலைஞரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டும், அரசியல் நாகரிகம் கருதி இவர்கள் வருகை தந்துள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் திமுக தலைவரை அவரது இல்லத்துக்கு வந்து சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.