கரோனா தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (12/05/2020) இரவு 08.00 மணிக்குத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக டெல்லியில் நேற்று (13/05/2020) மாலை 04.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 3 லட்சம் கடனுதவி வழங்கப்படும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதி தொகையை அரசே செலுத்தும். வருமான வரித்தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு" உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (14/05/2020) மாலை 04.00 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோருக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரூபாய் 20 லட்சம் கோடி திட்டத்தில் ரூபாய் 5.94 லட்சம் கோடிக்கு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.