பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நெல்லை கண்ணனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நெல்லை கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் தரப்பு ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று (10.01.2020) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லைக்கண்ணனின் வழக்கறிஞரான பிரம்மா கூறுகையில், நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலப்பாளையத்தில் கையெழுத்திட உத்தரவு என்பதால் நிபந்தனை ஜாமீனில் அவர் கையெழுத்திட வேண்டும். அதேசமயம் செஷன்ஸ் கோர்ட்டில் கிடைத்த ஜாமீன் உத்தரவை அவரது வழக்கறிஞர் தரப்பினர் சேலம் ஜெயிலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு முறைப்படி உத்தரவு கொடுத்த பிறகு நெல்லை கண்ணன் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அனேகமாக நாளை காலை 7 மணிக்கு மேல் அவர் விடுதலை ஆகலாம் என்றார் அவரது வழக்கறிஞர் பிரம்மா.