சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றிய அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சென்னை பெண்ணுக்கும் HIV ரத்தம் செலுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாங்காடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி லதாவிற்கு HIV ரத்தம் ஏற்றப்பட்டு, அந்த பெண்ணுக்கு செப்டம்பர் 15ம் தேதி குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ‘’நான் எந்த தவறும் செய்யாதவள். எந்த தவறும் செய்யாமல் தண்டனையை அனுபவித்து வருகிறேன். எனக்கு ரத்தம் செலுத்தியதற்கான ஆதாரங்களை வைத்துள்ளேன். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது ரத்த சோகையினால் ரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனக்கு 2 யூனிட் ரத்தம் செலுத்தினார்கள். இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது நடந்த பரிசோதனையில் எனக்கு எச்.ஐ.,வி இருப்பதாக கூறினார்கள். எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.
குடும்பத்தோடு சென்று முறையிட்டும் மருத்துவர்கள் தாங்கள் இதற்கு பொறுப்பாக முடியாது என்று தட்டிக்கழித்தனர். மருத்துவர்கள் மீது வழக்கு தொடர எங்களிடம் வசதி இல்லை. எனக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்று பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவிக்கிறார்.
ஊராருக்கு தெரியக்கூடாது. அதனால் இந்த சம்பவத்தை பற்றி வெளியே பேச வேண்டாம் என்று உறவினர்கள் கூறியிருந்தனர். அதனால் வெளியே யாருக்கும் சொல்லாமல் இருந்தேன். இப்போது உறவினர்களே என்னை நெருங்க விடாமல் அடித்து துரத்துகின்றனர். சிவகாசி சம்பவம் இப்போது வெளியே வந்துள்ளதால் நானும் தைரியமாக எனக்கு நேர்ந்த அவலத்தை வெளியே சொல்கிறேன்.
அக்கா, அண்ணன் என்று நெருங்கிய உறவுகளே என்னை கைவிட்டு விட்டனர். நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை. எந்த பாதிப்பும் இல்லாத என் மூத்த குழந்தையையும் கூட தொட உறவினர்கள் யோசிக்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எனக்கு கருணை தொகை தராதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்’’என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரோ, இந்த விவகாரம் குறித்து இப்போதுதான் என் கவனத்திற்கு வருகிறது. ஏற்கனவே என் கவனத்திற்கு வந்து நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மறுக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் குறித்து விசாரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.