
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாதத்தில் ஓரிருமுறை தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சீவம்பாளையம் தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அங்கு இரவு நேரத்தில் நண்பர்கள், உறவினர்களோடு கலந்து பேசுவதில் பிரியம் கொண்டவர். ஒரு நாள் மட்டும் அல்லாமல் நான்கைந்து நாட்கள் கூட சேலம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி என திட்டமிட்டு சேலத்தில் முகாமிடுவதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
நேற்று 1ம் தேதி தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் மகன் திருமணத்திற்காக தர்மபுரி மாவட்டம் சென்றார். திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு நேராக தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையம் தோட்டத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடியை அங்கிருந்த ஒரு கூட்டம் வரவேற்க தயாராக இருந்தது. அந்த கூட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டு உறவுகள் நட்பு வட்டத்தை கொண்டது. அதில் எடப்பாடி ஐக்கியமானால் முதல்வர் என்ற தோரணை எல்லாம் இருக்காது. அண்ணே, மாமன், மச்சான், பங்காளி என்ற மகிழ்ச்சியான வார்த்தைகள்தான் இருக்கும்.
முதல்வர் எடப்பாடி அரசியலில் ஈடுபட்ட காலத்தில் இருந்து இன்று வரை அந்த நட்பு வட்டம் அவ்வப்போது இரவுகளில் சங்கமித்துக்கொள்ளும். அப்படித்தான் நேற்றைய ஒன்றாம்தேதி இரவும் கூடி குலாவியது. அப்போது, குடும்ப பிரச்சனை முதல் சர்வதேச பிரச்சனை வரை அவரவருக்கு தெரிந்ததை பேசிக்கொண்டனர். ’சின்ன மாப்ளே... எலக்ஷன் எல்லாம் வருது. பவர் நிக்குமா? நிக்காதா?’ என்று கேட்க, மற்றொரு உறவு, ’எந்த கண்டத்திலும் தப்பியிடலாம். 11 எம்.எல்.ஏ. தீர்ப்பில் இருந்து தப்ப முடியாது பங்காளி’ என்று கூற, மற்றொரு உறவு, என்ன மச்சான்...உன் தலையில் இடியே விழுந்தாலும் அசராமல் இருப்பியே என கேட்டதற்கு, உற்சாகத்தில் சிரித்த எடப்பாடி, ’நாம என்ன கொண்டு வந்தோம் எத கொண்டு போவோம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை’ என பூரிப்போடு கூறியிருக்கிறார்.